Skip to main content

“தி.மு.க வெளிச்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இல்லை” - புதிய மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்

Published on 05/01/2025 | Edited on 05/01/2025
 CPM's new state secretary B. Shanmugam says There is no Marxist-Communist in the light of DMK

விழுப்புரம் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு நேற்று முன் தினம் (03-01-25) அன்று தொடங்கியது. 3, 4, 5 ஆகிய மூன்று தேதிகளில் நடைபெற்ற இந்த மாநாட்டில் முதல் நாளின் போது மாநாடு மற்றும் செந்தொண்டர் பேரணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இரண்டாவது நாளில், மாநாட்டு பிரதிநிதிகளின் விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் மூன்றாவது நாள், இன்று (05-01-25) புதிய நிர்வாகிகள் மற்றும் புதிய மாநிலக் குழு, மாநில செயற்குழு, புதிய மாநில செயலாளர் தேர்வு நடைபெற்றது. இதில் புதிய மாநிலச் செயலாளராக, பெ.சண்முகம்  தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  தற்போதைய மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் பதவி காலம் நிறைவடைந்ததையொட்டி, பெ.சண்முகம் அடுத்த மாநிலச் செயலாளரராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு பிறகு, பெ.சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மதவெறி சக்திகளை ஒழிக்க திமுகவுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும். மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் மக்கள் விரோத நடவடிக்கையில் பா.ஜ.க ஈடுபடுகிறது. வேலைவாய்ப்பை பறிக்கும் நடவடிக்கைகளில் தான் மத்திய அரசு ஈடுபடுகிறது. உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும். ஜனநாயக முறையில் போராட்டம் நடத்துவோம்” என்று கூறினார். 

இதையடுத்து, கே.பாலகிருஷ்ணன் கருத்துக்கு திமுகவின் நாளேடான முரசொலி விமர்சித்து கட்டுரை வெளியிட்டது குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பெ.சண்முகம், “ஊர்வலம், ஆர்ப்பாட்டம், போராட்டம் எல்லாம் இந்திய அரசியலமைப்பு சாசனம், இந்திய மக்களுக்கு வழங்கியிருக்கும் அடிப்படையான உரிமைகள். அந்த உரிமைகளை மறுப்பதற்கு எந்த அரசாங்கத்திற்கும் உரிமை கிடையாது. அன்றைக்கு எங்கள் கட்சியினுடைய மாநில மாநாட்டில் செந்தொண்டர் பேரணிக்கு கூட விழுப்புரம் மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் தான், அத்தகைய முறையில் எங்களுடைய கண்டனங்களை தெரிவிக்க வேண்டிய அவசியம் இருந்தது. ஒரு கட்சியினுடைய மாநில மாநாட்டுக்கு அனுமதி மறுப்பு என்பதை எக்காரணம் கொண்டும் எங்களால் ஏற்க முடியாது. அந்த வகையில், காவல்துறையின் அணுகுமுறைக்கு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார். இதை நிச்சயமாக திமுக தலைமை புரிந்துகொள்ளும் என்பதை நாங்கள் நம்புகிறோம்.

 CPM's new state secretary B. Shanmugam says There is no Marxist-Communist in the light of DMK

திமுகவோடு பல நேரத்தில் உறவாக இருந்திருக்கிறோம்; பல நேரத்தில் எதிர்வரிசையில் இருந்திருக்கிறோம். அதனால், தி.மு.கவால் தான் எங்களுக்கு வெளிச்சம் கிடைக்கிறது என்பதல்லாம் அதீதமான வார்த்தை. நிச்சயமாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய பலத்திற்கேற்ப சமரசமற்ற போராட்டங்களை நடத்துவதன் மூலமாக தான், தமிழகத்தில் எங்கள் கட்சி செல்வாக்கு பெற்ற கட்சியாக இருக்கிறது. எனவே, திமுக வெளிச்சத்தில் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று திமுக தலைமை சொல்வது பொறுத்தமல்ல. அந்த மாதிரியான செய்தியை முரசொலி பத்திரிகையில் வெளியிட்டிருப்பது என்பது பொறுத்தமில்லாத ஒன்றாகும்” எனப் பேசினார். 

முன்னதாக, இந்த மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், “தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலையை முதல்வர் பிரகடனம் செய்துவிட்டாரா?. தமிழகத்தில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுப்பது ஏன்? சீப்பை மறைத்து வைத்தால் திருமணத்தை நிறுத்திவிடலாம் என நினைக்க வேண்டாம். விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிராக திமுக அரசு செயல்பட்டால் போராடுவோம்” என்று பேசி இருந்தார்.  திமுக கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர், திமுகவுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தது தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கே.பாலகிருஷ்ணனின் பேச்சை தி.மு.கவின் நாளேடான முரசொலி விமர்சித்து கட்டுரை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது 

சார்ந்த செய்திகள்