நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், இந்தியா கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யுமாறு நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நாடு தற்போது ஒரு முக்கியமான தருணத்தில் நிற்கிறது. ஒவ்வொரு பிரிவினரும் ‘நாட்டை உருவாக்குபவர்களுக்கும்’, ‘நாட்டை அழிப்பவர்களுக்கும்’ உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்ள வேண்டும்.
இளைஞர்களுக்கு வேலை உறுதி, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாதம், ஒவ்வொரு ஏழைப் பெண்ணும் கோடீஸ்வரர், தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ரூ.400, ஜாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் பொருளாதார ஆய்வு, பாதுகாப்பான அரசியலமைப்பு மற்றும் குடிமக்களின் உரிமைகளை பாதுகாப்பது போன்ற உத்தரவாதங்களை காங்கிரஸும், இந்தியா கூட்டணியும் வழங்கியுள்ளன.
அதே வேளையில், வேலையின்மை உறுதி, விவசாயிகள் மீது கடன் சுமை, பாதுகாப்பற்ற மற்றும் உரிமையற்ற பெண்கள், கட்டாய மற்றும் ஆதரவற்ற தொழிலாளர்கள், அடித்தட்டு மக்களின் பாகுபாடு மற்றும் சுரண்டல், சர்வாதிகாரம் மற்றும் போலி ஜனநாயகம் போன்றவற்றை பா.ஜ.க அர்த்தப்படுத்துகிறது. உங்கள் எதிர்காலம் உங்கள் கைகளில் உள்ளது. சிந்தித்து புரிந்து கொண்டு சரியான முடிவை எடுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.