கொரோனா பெருந்தொற்று இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக இந்திய பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்தித்தது. இதன் காரணமாக அதனை சரி செய்யும் வகையில் பி.எம். கேர் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு அதன் கீழ் கொரோனா நிவாரண நிதி திரட்டப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஏற்கனவே பிரதமர் நிவாரண நிதி இருக்கும் நிலையில் பி.எம் கேர் என்று தனியாக ஒன்று எதற்காக என்று ஆரம்பம் முதலே எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுமட்டுமின்றி பி.எம் கேர் செயல்படும் முறை குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது முகநூல் பதிவில், "பிஎம் கேர்ஸ் திட்டத்திற்கு தேவையான நிதி பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து கிடைக்கப் பெறுகிறது. அதற்கான செலவுகள் குறித்து மத்திய அரசு எந்த கணக்கும் தருவதில்லை. அதில் இருந்து எவ்வளவு தொகை முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து யாருக்கும் எதுவும் தெரியாது. மக்கள் கஷ்டப்பட்டு உழைக்கும் நிதி நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் கோடிக்கணக்கான ரூபாய் எங்கே செல்கிறது? இது வரி செலுத்துவோரின் பணம்.
அரசு நிறுவனங்கள் மூலம் பிஎம் கேர்ஸ் க்கு இதுவரை 2,900 கோடி ரூபாய் நிதி பெறப்பட்டுள்ளது. இதில் 1,500 கோடி ரூபாயானது ஓஎன்ஜிசி (370 கோடி) , என்பிடிசி (330 கோடி), பிஜிசிஐ (275 கோடி), ஐஓசிஎல் (265 கோடி) மற்றும் பவர் பைனான்ஸ் கமிஷன் (222 கோடி) என 5 முக்கிய நிறுவனங்களிடம் இருந்து கிடைத்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் யாருடைய வாழ்க்கையை மேம்படுத்த எவ்வளவு நிதி உதவி வழங்கப்பட்டது என்பது குறித்த கணக்கு யாருக்கும் தெரியாது. மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் எங்கே செல்கிறது" என கேள்வி எழுப்பியுள்ளார்.