இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை மூன்று லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். பலர் தங்களது தாய், தந்தை மற்றும் உறவினர்களை இழந்து துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். பல குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை இழந்து தவித்துவருகின்றனர். கரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு உதவும் விதமாக, மத்தியப்பிரதேஷ் மாநிலம் ஏற்கனவே மாதாந்திர உதவித்தொகை, இலவச ரேஷன் உள்ளிட்டவற்றை அறிவித்துள்ளது.
இந்தநிலையில் கேரளாவும், கரோனவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்காக சிறப்புத் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தை அறிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு மூன்று லட்சம் வழங்கப்படும் என கூறியுள்ளார். அதன்பிறகு அந்தக் குழந்தைகளுக்கு 18 வயதாகும்வரை அவர்களுக்கு மாதம் 2 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், அக்குழந்தைகள் பட்டம்பெறும்வரை அவர்களது கல்வி செலவை அரசே ஏற்கும் எனவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். பினராயி விஜயனின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பும் பாராட்டும் குவிந்துவருகிறது.