நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான கடந்த 13 ஆம் தேதி, மீண்டும் நாடாளுமன்ற மக்களவையினுள் பாதுகாப்பு அத்துமீறல் நடந்தது. கடந்த 13ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் வண்ணப் புகையை அவை முழுக்க வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் வந்து, பாதுகாப்பு மீறல் குறித்து விளக்கம் தர வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். அமளியில் ஈடுபட்ட கனிமொழி உள்ளிட்ட 14 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். மேலும், இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்து வந்ததால், இந்த இரு அவைகளிலும் எந்த ஒரு விவாதமும் நடத்தப்படாமல் இருந்தது. இதையடுத்து, இதுவரை மொத்தமாக இந்த கூட்டத்தொடரில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது.
இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையை எதிர்த்து இந்தியா கூட்டணிக் கட்சிகள் இன்று (22-12-23) ஒன்றிணைந்து நாடு தழுவிய போராட்டத்தை நடத்தி வருகின்றன. அந்த வகையில், டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.
இந்தப் போராட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “சில இளைஞர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து புகை குப்பிகளை வீசியவுடன், தங்களை தேச பக்தர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பா.ஜ.க எம்.பி.க்கள் ஓடிவிட்டனர். நாங்க இந்த காட்சியை நேரில் கண்டோம். ஆனால் ஊடகங்களில் அது ஒளிபரப்பப்படவில்லை. நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் குறித்த சம்பவத்தில் ஒரு கேள்வி இருக்கிறது. அத்துமீறி நுழைந்தவர்கள் ஏன் இந்த வழியில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நாட்டில் உள்ள வேலையில்லாத் திண்டாட்டம்தான் இதற்குப் பதில். ஆனால், நாட்டிலுள்ள வேலையில்லாத் திண்டாட்டம் பற்றி எந்த ஊடகங்களும் பேசவில்லை. ஆனால், இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியே அமர்ந்து போராட்டம் செய்து கொண்டிருந்தபோது, நான் பதிவு செய்த வீடியோவைப் பற்றி அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார்.