கர்நாடக மாநிலத்திற்கு வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இந்த தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கர்நாடகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும், இப்போதிலிருந்தே தேர்தல்களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் பாஜகவும், இழந்த ஆட்சியை மீண்டும் பிடித்தாக வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் கர்நாடகாவில் பிரச்சாரங்களையும் பேரணிகளையும் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்து நீண்ட காலமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதால் அதன் சமநிலையை இழந்துவிட்டது. நாடாளுமன்றத்தில் பொய்யான குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி முன் வைத்து வருகிறார். ஆதாரம் கேட்டால் கொடுப்பது இல்லை என்று விமர்சித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து நேற்றைய பரப்புரையில், கர்நாடக மாநிலத்தில் மக்கள் தொகை பெருகியதற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று குற்றம் சாட்டிருந்தார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அதிகளவில் மின்வெட்டு நிலவியது. மக்களுக்கு போதிய மின்சாரம் வழங்கப்படவில்லை; அதனால்தான் மக்கள் தொகை அதிகரித்தது” என்று பேசியிருந்தார். இது தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.