
வங்கதேசத்தில் ஏற்பட உள்நாட்டுக் கலவரத்தையடுத்து அந்நாட்டுப் பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்தார். இத்தகைய சூழலில் தான் போராட்டக்காரர்கள் நேற்று (05.08.2024) பிற்பகல் 03:00 மணியளவில் பிரதமரின் இல்லத்தின் வளாகத்திற்குள் நுழைந்தனர். இதற்கு முன்னதாக பிரதமர் ஷேக் ஹசீனா நேற்று மதியம் 02:30 மணியளவில் பங்கபாபனில் இருந்து இராணுவ ஹெலிகாப்டரில் அவரது சகோதரியுடன் அங்கிருந்து தப்பியதாகத் தகவல் வெளியானது. இந்த பரபரப்பான சூழலில் வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
இதனையடுத்து இன்று (06.08.2024) காலை 10 மணி அளவில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வங்க தேச விவகாரம் தொடர்பாக இந்தியா எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி இருந்தது. மேலும் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளது குறித்தும், வங்கதேசத்தில் நடந்து வரும் அரசியல் மாற்றம், கலவரம் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதித்ததாகவும் கூறப்பட்டது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், ஜெய்சங்கர், ஜெ.பி. நட்டா, ஹெச்.டி. குமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதே போன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவரும், அக்கட்சியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால், திமுக சார்பில் டி.ஆர். பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் வங்கதேச விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் இன்று பிற்பகல் 03.30 மணிக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தானாக முன்வந்து அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்ய உள்ளார். அந்த அறிக்கையில் வங்கதேச விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து விளக்கமளிக்கிறார்.