மத்திய அரசு தனது சிறப்பு நண்பர்களின் பைகளை நிரப்பிக் கொண்டிருப்பதால்தான் ஏழைகள் பட்டினியில் இருக்கிறார்கள் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
ஊட்டச்சத்துக் குறைபாடு, உயரத்திற்குக் குறைந்த எடை கொண்ட குழந்தைகளின் விகிதம், வயதிற்கு குறைந்த உயரத்தைக் கொண்ட குழந்தைகளின் விகிதம் மற்றும் குழந்தை இறப்பு ஆகிய கூறுகளை அடிப்படையாகக் கொண்டு குளோபல் ஹங்கர் இண்டெக்ஸ் என்ற உலகப் பட்டினிக் குறியீடு அறிக்கை ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது.
2020 ஆம் ஆண்டுக்கான இந்தப் பட்டியலில் இந்தியா 94 ஆம் இடத்தில் உள்ளது. அண்டைநாடுகளான வங்கதேசம் 75 -ஆம் இடத்திலும் பாகிஸ்தான் 88 -ஆம் இடத்திலும் உள்ளன. இந்த இரண்டு நாடுகளை விடவும் இந்தியா மோசமாக இருப்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. 2010-14 காலகட்டத்தில் குழந்தைகள் ஊட்டச்சத்தின்றி விரயம் செய்யப்படும் சதவீதம் 15.1% ஆக இருந்தது, 2015-19-ல் இது மோசமடைந்து 17.3% ஆக அதிகரித்துள்ளது. இந்தப் பட்டினிக் குறியீட்டுப் பட்டியலில் ஆப்பிரிக்க நாடான 'சாட்' கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. இந்நிலையில், இதனை மேற்கோள்காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, "இந்தியாவில் ஏழைகள் எல்லாம் பட்டினியோடு இருக்கிறார்கள். ஏனென்றால், மத்தியில் ஆளும் மோடி அரசு தனது சிறப்பு நண்பர்களின் பைகளை நிரப்பிக் கொண்டிருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.