தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் சோனு சூட். கரோனா ஊரடங்கு காலத்தில், புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு உதவி செய்தார். இதனால் இந்தியா முழுவதும் அவருக்கு பாராட்டு குவிந்தது. இந்தியாவின் பிரபலமான நபர்களில் ஒருவராக மாறினார்.
இந்தநிலையில் பஞ்சாப் மாநில தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில், இந்திய தேர்தல் ஆணையம் சோனு சூட்டை பஞ்சாபின் அடையாள சின்னமாக நியமித்தது. நேர்மையாக வாக்களிப்பது தொடர்பாக பஞ்சாப் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த சோனு சூட் அம்மாநிலத்தின் அடையாளமாக சின்னமாக நியமிக்கப்பட்டார்.
இந்தநிலையில் தற்போது பஞ்சாப் தேர்தல் ஆணையம், சோனு சூட் பஞ்சாப் மாநிலத்தின் அடையாளம் சின்னமாக நியமிக்கப்பட்டதை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. அதேநேரத்தில், தனது குடும்ப உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுவதால், பஞ்சாப் மாநிலத்தின் அடையாளம் சின்னம் என்ற பொறுப்பிலிருந்து தானாக முன்வந்து விளங்குவதாகவும், இந்த முடிவை தானும் தேர்தல் ஆணையமும் இணைந்து எடுத்ததாகவும் சோனு சூட் கூறியுள்ளார்.
விரைவில் நடைபெறவுள்ள பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் தனது தங்கை போட்டியிடுவார் என ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.