நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் நேற்று 08/12/2021 பிற்பகல் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத், 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இந்திய விமானப் படை சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் வைக்கப்பட்ட பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் 13 பேரின் உடல்களும் சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கிருந்து அந்த உடல்கள் விமானம் மூலமாக டெல்லிக்கு செல்கிறது.
அங்கு 13 பேரின் உடல்களுக்கும் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் ஹெலிகாப்டர் விபத்தின் தீவிரத்தால் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; விமான விபத்தின் தீவிரம் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பதில் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. (உயிரிழந்தவர்களின்) அன்புக்குரியவர்களின் உணர்ச்சிகளை கருத்தில் கொண்டு உடல்களை அடையாளம் காண அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
உயிரிழந்த அனைத்து அதிகாரிகளின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும் டெல்லிக்கு வந்துள்ளனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் ஆதரவும் வழங்கப்பட்டு வருகிறது. உடல்களை அடையாளம் காண அறிவியல் ரீதியான நடவடிக்கைகளுடன், நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் உதவியும் பெறப்படும். உடல்கள் அடையாளம் காணப்பட்ட பின்னரே அவை உறவினருக்கு வழங்கப்படும். அடையாளம் காணும் செயல்முறை முடிந்ததும், குடும்பத்தினருடன் ஆலோசித்து அதிகாரிகளுக்கு உரிய இராணுவ சடங்குகள் முடிவு செய்யப்படும். இவ்வாறு இந்திய இராணுவம் கூறியுள்ளது.
பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட நான்கு பேரின் உடல் மட்டுமே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் கூறியுள்ளன.