புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகின்றது என்பதை அறிந்த போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்த போதிலும் முழுவதுமாக கட்டுப்படுத்த முடியவில்லை. அவ்வப்போது கஞ்சா விற்கும் கும்பலை கைது செய்து சிறையில் அடைத்தாலும், அவர்கள் விரைவிலேயே விடுதலையாகி மீண்டும் கஞ்சா விற்பனையை தொடர தான் செய்கிறார்கள்.
இந்நிலையில் நெல்லித்தோப்பு பெரியார் நகர் பகுதியில் ரகசியமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து போலீசார் சாதாரண உடையில் சென்று கண்காணித்தனர். அப்போது ரகசிய இடத்தில் வைத்து கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்பு காவல்துறை நடத்திய விசாரணையில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த கேசவன் , ருத்ரேஷ்மணி, பாலாஜி என்பதும், இவர்கள் திருக்கோவிலூரை சேர்ந்த கஞ்சா மொத்த வியாபாரியான சேகரிடம் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து கேசவன், பாலாஜி, சேகர் மற்றும் ருத்ரேஷ்மணி ஆகிய 4பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2.25 லட்சம் மதிப்புடைய 6 கிலோ கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர். அதை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.