
இறந்ததாக அடக்கம் செய்யப்பட்ட நபர் மூன்று மாதங்கள் கழித்து உயிருடன் வந்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் தும்கூர் மாவட்டம் மதிகிரி தாலுகாவிற்கு உட்பட்ட சிறிய கிராமம் சிக்கமாலூர். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜப்பா (வயது 59). கூலி வேலை செய்து வந்த நாகராஜப்பா மது போதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இவருக்கு இரு மகள்கள் உள்ள நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நாகராஜப்பாவை காணவில்லை என உறவினர்களும் குடும்பத்தாரும் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். தேடுதலுக்குப் பின்னர் நாகராஜப்பா ஒரு புதர் பகுதியில் இறந்து கிடப்பதாகத் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து அவருடைய மகள் நேத்ரா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். பிறகு உடற்கூறாய்விற்கு அவரது உடல் அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் சொந்த ஊரிலேயே நாகராஜப்பாவின் உடல் உறவினர்கள் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது. அதற்கான இறப்பு சான்றிதழும் பெறப்பட்டது.

இந்நிலையில் நாகராஜப்பா இறந்து மூன்று மாதங்கள் கழித்து நேற்று திடீரென சொந்த ஊருக்குத் திரும்பினார். முதலில் அவரை பார்த்த அனைவரும் பேய் என நினைத்து அச்சத்தில் ஓடினர். நாகராஜப்பா சொந்த வீட்டுக்குச் சென்றபோது அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ந்தார். இதுகுறித்து கிராம மக்கள் அவரிடம் விசாரிக்கையில் இதுதொடர்பான தகவல் வெளியானது. இதனைத்தொடர்ந்து என்னதான் நடந்தது என அறிந்துகொள்ள உள்ளூரைச் சேர்ந்த செய்தியாளர்கள் இதுதொடர்பாக அவரிடம் பேட்டி எடுத்தனர். அப்பொழுது மதுபோதையில் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்ததாக நாகராஜப்பா கூறினார். அப்பொழுது நாகராஜப்பா என்று உடற்கூறாய்வு செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டவர் யார் என்றகுழப்பத்தில் உள்ளனர் அதிகாரிகள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)