புதுச்சேரியில் காணாமல் போன ஒன்பது வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாக்கு மூட்டையில் கட்டி சாக்கடையில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தில் துப்பு துலக்கும் விதமாக அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏழு பேரை பிடித்து போலீசார் நேற்று மதியத்தில் இருந்து இன்று அதிகாலை வரை விடிய விடிய விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞன் மற்றும் அவனுக்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரை கொலை செய்து மூட்டை கட்டி சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது. மேலும் கருணாஸ் என்ற அந்த இளைஞர் போலீசாருடன் சேர்ந்து அவர்களுக்கு உதவுவது போல் சிறுமியை தேடியதும் தெரியவந்துள்ளது. மேலும் கருணாஸ் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவன் என்பது தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்கள் மூலம் இந்த செய்திகள் பரவின. இந்நிலையில் புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை பகுதியில் கருப்பு சட்டை அணிந்து ஒன்றுகூடிய இளைஞர்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் சிறுமியின் புகைப்படம் பொறித்த பதாகையை ஏந்தி நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடனடியாக அங்கு வந்த போலீசார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு புதுச்சேரி அரசு 20 லட்ச ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளது. முன்னதாக சிறுமியின் பெற்றோர் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை சந்தித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்க அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும் என தெரிவித்துள்ள பாஜக அமைச்சர் நமச்சிவாயம், குற்றவாளிகளுக்கு உதவிய போலீஸ் அதிகாரி மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். அதே நேரத்தில் சிறுமியின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.