இந்தியாவில் கரோனா தீவிரமான பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது கரோனா பாதிப்பு குறைந்துவருகிறது. இந்தநிலையில், குஜராத்தில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் ஆலைகளைக் காணொளி மூலமாக திறந்துவைத்த அமித்ஷா, பிரதமர் மோடி தலைமையில், இந்தியா கரோனாவிற்கு எதிராக பெரும் வெற்றியைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆக்சிஜன் ஆலையைத் திறந்துவைக்கும் நிகழ்வில் அமித்ஷா பேசுகையில், "இரண்டாவது அலை வந்ததும், வைரஸ் மரபணு மாற்றமடைந்து வேகமாக பரவத் தொடங்கியது. வேகமாக பரவியது மட்டுமல்லாமல், மக்களை விரைவாகவும் மோசமாகவும் பாதித்தது. இருப்பினும் குறுகிய காலத்தில் அதைக் (இரண்டாவது அலையை) கட்டுப்படுத்தி, அது வீழ்ச்சியடைவதை உறுதிசெய்தது நமது கூட்டு வெற்றியாகும்" என கூறினார்.
தொடர்ந்து அவர், "மற்ற போராட்டங்களுடன் சேர்த்து இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு மூலைகள் புயலால் பாதிக்கப்பட்டது. இது இந்தியாவை இயற்கை சோதிப்பது போல் இருக்கிறது. இந்தக் கடினமான காலக்கட்டத்தில், உலகத்தோடு ஒப்பிடுகையில், மோடி தலைமையில் நமது நாடு கரோனாவிற்கு எதிராக பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது என கூறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறன். இந்தியாவில் இந்த யுத்தத்தை திட்டத்தோடும் தைரியத்தோடும் போராடினோம். இங்கு அரசோடு இணைந்து 135 கோடி இந்தியர்கள் பிரதமர் மோடி தலைமையில் போராடினர்" எனவும் தெரிவித்தார்.