கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலரை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார். அதில் ஒன்றாக தொழிலதிபரை மிரட்டி 200 கோடி ரூபாய் மோசடி செய்துள்ள வழக்கில் கடந்த 2019-ஆம் ஆண்டு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர், அவரது மனைவி லீனா மரியா பால் உள்ளிட்ட 6 பேர் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இரட்டை இலைச் சின்னம் லஞ்சம் தொடர்பாகவும் 200 கோடி ரூபாய் மோசடி தொடர்பாகவும் கைது செய்யப்பட்ட சுகேஷ் என்பவர் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுகேஷ் சந்திர சேகர் சிறையில் இருந்தவாறே டெல்லி துணைநிலை ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதம் டெல்லி அரசியலை பரபரப்பாக்கியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியில் போட்டியிட எனக்கு வாய்ப்பு அளிப்பதாக கூறியதால் 50 கோடி ரூபாய் வழங்கியதாகவும் டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் சிறையில் தன்னை பலமுறை சந்தித்துள்ளதாகவும் சுகேஷ் குறிப்பிட்டுள்ளார். சிறையில் பாதுகாப்பு வேண்டுமானால் மாதம் 2 கோடி அனுப்பவேண்டும் என சத்யேந்திர ஜெயின் கூறியதாகவும் சுகேஷ் அக்கடிதத்தில் கூறியுள்ளார். கடிதத்தை முன் வைத்து அமலாக்கத்துறையினர் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சியும் டெல்லி அரசும் ஊழலில் ஈடுபட்டதை அம்பலப்படுத்த ஆதாரங்களை வைத்திருக்கிறேன் என்றும் சுகேஷ் ஜெயின் அக்கடிதத்தில் கூறியுள்ளார். சுகேஷ் குற்றச்சாட்டினை முன்வைத்து ஆம் ஆத்மி அரசுக்கு பாஜக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
குஜராத்தில் தேர்தல் வரவுள்ளதால் பாஜக மோர்பி பால பிரச்சனையைத் திசை திருப்புகிறது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.