![puducherry governor order for health department peoples fever](http://image.nakkheeran.in/cdn/farfuture/IZA5YX_PVNUhdUYapFyvQ-4vSZmSFRjhZsugxQCZGdU/1656842034/sites/default/files/inline-images/tamili434.jpg)
புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் காலராவால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் இணைநோய்களால் உயிரிழந்தனர். காலரா பாதிப்புள்ள இரண்டு பேரில் ஒருவருக்கு புற்றுநோய், மற்றொருவருக்கு உயர் ரத்த அழுத்தம் பாதிப்பு இருந்தது. நோய் தடுப்பு முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைய வேண்டாம். காரைக்காலில் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் இதுவரை 1,584 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், காரைக்காலில் காலரா பாதிப்புள்ள பகுதிகளில் சிறப்புக்குழு அமைத்து கண்காணிக்க தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநருமான (பொறுப்பு) டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். அதேபோல், காலரா பாதிப்பை உடனே கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். மக்கள் பீதியடைய வேண்டாம்; அதே நேரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காலரா பாதித்தோருக்கு சிறப்பு வார்டுகள் அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குடிநீரைக் காய்ச்சி பருக வேண்டும்; அனைவரும் சுகாதாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என பொதுமக்களை ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.