புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேற்று (31.03.2020) சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
புதுச்சேரி மக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனைத்து கடைகளும் திறந்து இருக்கும். அதே வேளையில் காலை 06.00 மணியில் இருந்து மதியம் 02.30 மணி வரை மட்டுமே திறக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்குகள் உட்பட அனைத்துக் கடைகளும் இந்த நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் மூடப்படும். இதில் மருந்து கடைகள் மற்றும் பால் கடைகள் மட்டும் விதிவிலக்காகும்.
விவசாயிகள் இடு பொருட்கள் கொண்டு செல்வதற்கும், விளை பொருட்கள் கொண்டு செல்லவும் தடையில்லை. காவல்துறையினர் இவர்களைத் தடுக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றேன். உரம், இடு பொருட்கள் விற்பனையகம் வழக்கம்போல் திறந்திருக்கும்.
சமீபத்தில் டெல்லி தப்லீக் மாநாட்டிற்குச் சென்று திரும்பிய புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் 3 பேர், காரைக்காலைச் சேர்ந்த 2 பேர், ஏனாம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது தனிமைப்படுத்தபட்டுள்ளனர்.
புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனையில் கரோனாக்கென சிறப்பு வார்டு தயார் நிலையில் உள்ளது. 1,083 பேர் வீட்டிலேயே வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.