காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்புச் சட்டமான 370 நீக்கப்பட்ட பிறகு முதன் முறையாகக் காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக கடந்த 17 ஆம் தேதி லடாக் சென்றிருந்தார். அங்கு லடாக் மக்களைச் சந்தித்து உரையாடிய ராகுல் காந்தி, லேவில் உள்ள குஷோக்கு பகுலா புட்சல் மைதானத்தில் 2023 ராஜீவ் காந்தி புட்சல் போட்டியின் இறுதிப் போட்டியை நேரில் கண்டு ரசித்தார். முதலில் இரண்டு நாட்களாகத் திட்டமிட்டிருந்த இந்த பயணம், பாங்காக் ஏரி, நுப்ரா பள்ளத்தாக்கு, கார்கில் ஆகிய பகுதிகளுக்குச் செல்வதற்காக மேலும் 4 நாள் தனது பயணத்தை நீட்டித்தார்.
கடந்த 19 ஆம் தேதி லேயில் இருந்து பாங்காக் ஏரி வரை சுமார் 130 கி.மீ தொலைவுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தார். அவர் பயணம் செய்யும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. அதன் பின், மீண்டும் லே பகுதிக்குத் திரும்பிய ராகுல், அங்குள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடினார். இந்த பயணத்தின் கடைசி நாளான நேற்று, கார்கில் வீரர்கள் நினைவிடத்திற்கு சென்ற ராகுல் காந்தி, அங்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் பீமாதங் பகுதியில் கார்கில் ஜனநாயக கூட்டணி ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அதில் பேசிய அவர், “கடந்த ஒரு வாரத்தில், ஒட்டுமொத்த லடாக்கையும் எனது இருசக்கர வாகனத்தில் சென்று பார்வையிட்டேன். வியூக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த லடாக் பாங்காக் ஏரி பகுதிக்கு சென்றபோது, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்து கொண்டுள்ளது என்பது தெளிவானது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக நாட்டின் ஒரு அங்குலம் இடம் கூட சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார். பிரதமர் உண்மையைத் தவிர பொய் மட்டுமே பேசி வருகிறார். அரசியலமைப்பு சட்டத்தின் 6 ஆவது அட்டவணையின் கீழ் லடாக்குக்கு முழு மாநில அந்தஸ்து கோரி போராடும் அமைப்புகளுக்கு காங்கிரஸ் எப்போது ஆதரவளிக்கும். வளங்கள் நிறைந்த இந்த லடாக் பகுதியை தனது கார்ப்பரேட் நண்பரான அதானியிடம் ஒப்படைக்க பா.ஜ.க முயற்சி செய்து வருகிறது. அதை காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது.
அரசியல் பிரதிநிதித்துவம், நிலம், கலாச்சாரம், மொழி பாதுகாப்பு, வேலைவாய்ப்பு மற்றும் கைப்பேசி இணைப்பு பிரச்சனை உட்பட பல்வேறு கோரிக்கைகளை லடாக் பொதுமக்கள் என்னிடம் முன்வைத்தனர். லடாக் மக்களுக்கு காங்கிரஸ் எப்போதும் துணை நிற்கும் என்பதை நான் உறுதியளிக்கிறேன். அரசியல் பிரதிநிதித்துவம் வழங்கினால் அவர்களிடம் இருந்து நிலத்தை பறிக்க முடியாது என்று பா.ஜ.கவுக்கு நன்றாக தெரியும். அங்குள்ள நிலங்களை தொழிலதிபர் அதானிக்கு வழங்குவதற்கு பா.ஜ.க விரும்புகிறது. நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம்” என்று பேசினார்.
அதனை தொடர்ந்து, லடாக் சுற்றுப்பயணம் குறித்து ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “லடாக்கின் மூலைமுடுக்கெல்லாம் சென்று இளைஞர்கள், தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் ஏழை மக்களைச் சந்தித்து பேசினேன். மற்ற தலைவர்கள் தங்கள் கருத்தை மட்டுமே பேசுகிறார்கள். ஆனால், நான் உங்கள் கருத்தை கேட்க விரும்புகிறேன். இந்தியாவின் ஆயிரக்கணக்கான நிலங்களை சீனா அபகரித்து அழித்துள்ளது. ஆனால், இதை மறுப்பதன் மூலம் பிரதமர் பொய் சொல்கிறார். இது லடாக்கில் உள்ள அனைவருக்கும் தெரியும்” என்று தெரிவித்தார்.