புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான பாசிக் (குடிநீர் விநியோகம் மற்றும் காய்கறிகள் விற்பனை) நிறுவனம் 2007 ஆம் ஆண்டு வரை இலாபத்தில் இயங்கியது. அந்நிறுவனத்திற்குத் தலைவர்கள் நியமிக்கப்பட்ட பிறகு அந்த நிறுவனம் நஷ்டத்தை சந்தித்தது. இதனால் அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு பல ஆண்டுகளாக ஊதியம் தரப்படவில்லை. அதையடுத்து பாசிக் நிறுவனத்தில் வேலை செய்த 48 ஊழியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2013 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் கடந்த 14.07.2020 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் 3 மாதங்களுக்குள் பாசிக் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனாலும் ஊழியர்களுக்குச் சம்பளம் தரப்படவில்லை.
இதற்கிடையே வழக்கு தொடுத்த 48 பேரில் பணி நீக்கம் செய்யப்பட்ட 8 ஊழியர்கள், 'சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்காத தலைமைச் செயலாளர் அஸ்வனிகுமார், துறைச் செயலாளர் ரவி பிரகாஷ், இயக்குனர் பாலகாந்தி, பாசிக் மேலாண் இயக்குநர் சிவசண்முகம் ஆகியோர் மீது கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, 'புதுச்சேரி தலைமைச் செயலாளர் அசோக்குமார், துறைச் செயலாளர் ரவி பிரகாஷ், வேளாண் இயக்குநர் பாலகாந்தி, பாசிக் மேலாண் இயக்குநர் சிவசண்முகம் ஆகியோர் டிசம்பர் 10ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால் மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் வேளாண் இயக்குநர் பாலகாந்தி, மேலாண் இயக்குநர் சிவசண்முகம் ஆகியோர் மட்டுமே நேரில் ஆஜராகினர். தலைமைச் செயலாளர் அஸ்வனிகுமார், துறைச்செயலாளர் ரவி பிரகாஷ் ஆகியோர் ஆஜராகவில்லை. அதனைத் தொடர்ந்து நேரில் ஆஜராகாத தலைமைச் செயலாளர், துறைச் செயலாளர் ஆகியோர் நேரில் ஆஜராகும்படி ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடியாணை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
தலைமை செயலாளருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.