துணை முதல்வர் பதவி விவகாரம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுஷில் மோடி அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் நிதிஷ்குமார் இல்லத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் மகாராஷ்ட்ர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பீகார் மாநில முதல்வராக நிதிஷ்குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து 7-வது முறையாக நிதிஷ்குமார் முதல்வராகப் பதவியேற்கிறார். மேலும், துணை முதல்வர்களாக பாஜகவின் தர்கிஷோர் பிரசாத் மற்றும் ரேணு தேவி நியமிக்கப்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் இருவரும் முறையே பீகார் மாநில பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தற்போதைய துணை முதல்வரான சுஷில் குமார் மோடிக்கு பொறுப்பு வழங்கப்படாததால் அவர் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சுஷில் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘பாஜக மற்றும் சங் பரிவார் ஆசியுடன் கடந்த 40 ஆண்டுகாலமாக அரசியலில் இயங்கி வருகிறேன். கட்சித் தொண்டர் என்ற பொறுப்பை யாரும் என்னிடம் இருந்து பறிக்க முடியாது’’ எனக் கூறியுள்ளார். தனது பொறுப்பு பறிக்கப்பட்டது குறித்து சுஷில் மோடி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் அதேநேரம், அவருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கத் திட்டமிடப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.