புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர், "புதுச்சேரியில் கடந்த 15 நாட்களாக கரோனா தொற்று இல்லை. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு புதுச்சேரியில் நோய்ப் பரவல் இல்லாத நிலையை உருவாக்கி இருக்கின்றோம். முதலமைச்சர், அமைச்சர்கள் என யாருக்கும் தொற்று இல்லை என்று சோதனை முடிவு வந்துள்ளது. காவல்துறை, சுகாதாரப் பணியாளர்கள் அனைவருக்கும் சோதனை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று அடுத்தவாரம் பத்திரிகையாளர்களுக்கு கரோனா மருத்துவப் பரிசோதனை எடுக்கப்படவுள்ளது.
துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மத்திய அரசை நாடி மாநிலத்தின் வளர்ச்சியைத் தடுத்து வருகின்றார். அரசு திட்டங்களுக்குப் பல முட்டுக்கட்டைகளைப் போட்டு வருகின்றார். இதுகுறித்து பாரத பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தேன். மத்திய அரசு பாராமுகமாக உள்ளது.
புதுச்சேரி அரசியல் கட்சி நிர்வாகிகள் பலர் துணை நிலை ஆளுநரை எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளனர். கிரண்பேடி அம்மையார் எங்களுக்குத் தொல்லை கொடுப்பது இல்லாமல், அரசுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், அதிகாரிகளுக்கு நேரடியாக வேலை கொடுத்து, அதிகாரிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி வருகின்றார். காவல்துறை அதிகாரிகள் இரவு, பகலாக வேலை செய்தாலும் பலர் அவர்கள் மீது பழி சுமத்தி வருகின்றனர். இதனைச் சரிசெய்ய காவல்துறை தலைவரிடம் தெரிவித்துள்ளேன். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நீதிமன்றம் அரசின் அன்றாட நிகழ்வுகளில் தலையிட கூடாது என்று கூறி இருந்தும் அவர் நீதிமன்ற உத்தரவை மீறி செயற்படுகின்றார்.
காலை நேரங்களில் பொதுமக்கள் பலர் பொருட்களை வாங்க வருகின்றனர். பலர் அரசின் உத்தரவுகளை மதிப்பதில்லை. தமிழகத்தின் பல மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கடை திறக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்கள். மக்கள் இதேபோன்று வெளியில் வந்து கொண்டிருந்தால் புதுச்சேரியிலும் அதேபோன்று உத்தரவு பிறப்பிக்கப்படும். இதனால் நாம் கவனமாக இருக்கவேண்டும், தேவையில்லாமல் வெளியில் வரக்கூடாது. சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். முகக் கவசம் அணிந்து வர வேண்டும். பொதுமக்கள், அரசைக் கடையை மூட வேண்டிய நிலைக்குத் தள்ள வேண்டாம். புதுச்சேரி மக்கள் தனிமையைக் கடைப்பிடிக்க வேண்டும், வெளியே நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும்" என்றார்.