புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று (13.10.2020) சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
புதுச்சேரியில் இதுவரை 17 சதவீதம் பேருக்கு நோய் தொற்று பரிசோதனை செய்து இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது. சுகாதாரத்துறை மற்றும் அனைத்து துறைகளும் கரோனா நோயை கட்டுப்படுத்த தீவிரமாகப் போராடி வருகின்றனர்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கூட்டத்தில் புதுச்சேரி மாநிலத்திற்கு 798 கோடி ரூபாய் ஏப்ரல் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அரசு வெளிமார்க்கெட்டில் இருந்து நிதியை வாங்கி இழப்பை ஈடு கொடுக்க வேண்டும் என 9 மாநிலங்களில் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்க்கு எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. மாநிலத்துக்கு கொடுக்கப்பட வேண்டிய இழப்பீடு கொடுக்கப்படவில்லை. மாநில அரசை கடன் வாங்க சொல்கிறார்கள். மத்திய அரசு அனுமதி இல்லாமல் புதுச்சேரி அரசு கடன் வாங்க இயலாது. மத்திய அரசு ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அல்லது வெளி மார்க்கெட்டில் கடனை வாங்கி இழப்பீட்டை மாநிலத்திற்கு வழங்கலாம் என தெரிவித்தும் இதுவரை வழங்கவில்லை.
சென்டாக் மூலம் மருத்துவ மானவர்கள் சேர்க்கை விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்பட்டது. மேலும் நமது மாநில அரசின் பரிந்துரைப்படி மாணவர்களை சேர்த்தனர். ஒரு சில கல்லூரி நிர்வாகம் அல்லது மாநில அரசு பரிந்துரைகளை ஏற்காமல் தன்னிச்சையாக மாணவர்களை சேர்த்தது. இந்நிலையில் கல்லூரி நிர்வாகிகளை மிரட்டி பொய்யான வழக்கு தொடுத்து சி.பி.ஐ விசாரணைக்கு உட்படுத்தியது. சென்டாக் மீது தவறு நடப்பதாக கூறி அதிகாரிகளின் மீது சி.பி.ஐ விசாரணைக்கு வைக்க உத்தரவிட்டது. சி.பி.ஐ புதுச்சேரிக்கு வந்து மருத்துவக்கல்லூரி ஆவணங்களை சரிபார்த்தனர். இதில் அதிகாரிகள் சரிவர செய்துள்ளதாக கூறி உள்ளனர்.
புதுச்சேரி மக்களுக்கு தீபாவளி பரிசு வழங்குகிறேன் என்று துணைநிலை ஆளுநர் தற்போது தெரிவித்திருப்பது என்ன நோக்கம்? தவறான தகவல்களை நான் கொடுப்பதாக கூறியுள்ளார். புதுச்சேரி மக்கள் மத்தியில் ஒரு பெரும் குழப்பத்தை துணைநிலை ஆளுநர் உருவாக்குகின்றார். அரிசி போடுவதை தடுத்துவிட்டு ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை எவ்வாறு அமுல்படுத்துவது?
அரிசி கொடுப்பதால் ஊழல் நடை பெறுகிறது என்கிறார். இது அனைத்து மாநிலங்களின் நடைபெறுகிறதா? அரிசி குறித்தான வழக்கு நிலுவையில் உள்ள போது நான் தவறான தகவல் வெளிப்படுத்துவதாக துணை நிலை ஆளுநர் கூறுவது எவ்வாறு? அரசின் கொள்கையில் துணைநிலை ஆளுநர் தலையிடுவது ஏன்? ராஜ்நிவாஸ் என்பது பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமாக மாறிவிட்டது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நசுக்கும் வேளையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. துணைநிலை ஆளுநர் அரைகுறையான செய்தியை சொல்வதை நிறுத்தி விட வேண்டும்.புதுச்சேரி மக்களுக்கு விரோதமாக செயல் படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்"என்றார்.