ஆந்திரா மாநிலம் அமலாபுரத்தைச் சேர்ந்தவர் ரவிதேஜா. ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் குஜராத் மாநிலம் ஜூனாகட் பகுதியில் 2019 ஆம் ஆண்டு முதல் மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றி வந்தார். அதற்கு முன், இவர் மங்களூரில் காவல்துறை கண்காணிப்பாளராகப் பணிபுரிந்தார். மங்களூரில் வெற்றிகரமாகப் பணியாற்றிய பிறகு, அங்கிருந்து அகமதாபாத்தில் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், 3 ஆண்டுகளாக ஜூனாகட்டில் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த அவர், தற்போது காந்தி நகர் மாவட்ட காவல்துறைத் தலைவராக மாற்றப்பட்டார்.
இதனை அறிந்த ஜூனாகட் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால், இவரின் நேர்மை; அந்த பகுதியில் உள்ள குற்றங்களைக் குறைத்தது; பொது மக்களின் நண்பனாக போலீஸ் பணியை மாற்றியது உள்ளிட்ட எஸ்.பி. ரவிதேஜாவின் பல்வேறு நடவடிக்கையால் ஜூனாகட் குற்றங்கள் இல்லாத மாவட்டமாக மாறியதாகக் கூறப்படுகிறது. மேலும், எஸ்.பி. ரவிதேஜா காவல்துறையில் ஆற்றிய சேவையைப் பாராட்டி அப்போதைய துணை முதல்வர் நவீன் படேல் கையால் பாராட்டுச் சான்றிதழைப் பெற்றுள்ளார். காந்தி நகருக்கு இடம் மாற்றப்பட்ட எஸ்.பி. ரவிதேஜாவை ஜூனாகட் மக்கள் பூக்களைத் தூவி மரியாதை செலுத்தி வரும் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ரவிதேஜா காந்தி நகருக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டதால், ஜூனாகட் மக்கள் அவரைப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட காரில் அமர வைத்து எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து போலீசார் பாரம்பரிய முறைப்படி காரில் கயிற்றைக் கட்டி இழுத்து வந்தனர். அதன் பின்னர், எஸ்.பி அலுவலகத்திற்குள் சென்று வெளியே வந்த ரவிதேஜாவை காண ஏராளமான மக்கள் நீண்ட தூரமாக வரிசையில் திரண்டு நின்றனர். அதன் பின்னர் அனைத்து மக்களையும் சந்தித்து அவர்களிடம் கை குலுக்கி பேசினார்.
அதனையடுத்து, அவர் தனது காரில் ஏறினார். அவர் வந்த காரின் பின்னால் ஏராளமான போலீஸ் வாகனங்கள் அணிவகுத்து வந்தன. மேலும், அவர் செல்லும் வழியெல்லாம் மக்கள் திரண்டு நின்று பூ மழை தூவி வழியனுப்பி வைத்தனர். மக்களின் அன்பு மழையில் நனைந்த எஸ்.பி. ரவிதேஜா இருகரம் கூப்பி மிகவும் பணிவுடன் அவர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டார். இந்த வழியனுப்பும் விழா இணையதளத்தில் வெளியாகி பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்திருக்கிறது.