புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டமன்றத்தைப் பொறுத்தவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 30 பேர், அதில் நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் என 33 பேர் இருப்பார்கள். கட்சித் தாவல் நடவடிக்கை காரணமாக பாகூர் தொகுதி எம்.எல்.ஏ. தனவேலுவின் பதவி பறிக்கப்பட்டது. சமீபத்தில் பா.ஜ.கவில் இணைந்த நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் ஆகியோர் கடந்த வாரம் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தனர். அதைத் தொடர்ந்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவும், காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமாரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
அடுத்தடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வருவது புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பான்மைக்கு 16 இடங்கள் தேவை என்ற நிலையில், ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 14 ஆக குறைந்துள்ளது. அதேசமயம் எதிர்க்கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ் 7, அதி.மு.க 4, பா.ஜ.க நியமன எம்.எல்.ஏக்கள் 3 என எதிரணியிலும் 14 உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் நாராயணசாமி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து எதிர்க்கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, அ.தி.மு.க சட்டப்பேரவை கட்சித் தலைவர் அன்பழகன், பா.ஜ.க மாநில தலைவர் சுவாமிநாதன், முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் இன்று (17.02.2021) கூட்டாக அளித்த நேர்காணலின்போது, "பெரும்பான்மை பலம் இழந்துள்ளதால் காங்கிரஸ் ஆட்சி ராஜினாமா செய்ய வேண்டும்" என வலியுறுத்தி உள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் நாராயணசாமி அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்த முதலமைச்சர் நாராயணசாமி, "எங்களைப் பொறுத்தவரை காங்கிரஸ் - தி.மு.க கூட்டணிக்குப் பெரும்பான்மை இருக்கிறது.
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கின்றனர். எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களின் கோரிக்கை நியாயமானது அல்ல. எதிர்க்கட்சிகளின் பலத்தை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். எங்களுடைய கூட்டணி பலமாக இருக்கிறது. எங்களுக்குப் பெரும்பான்மை இருக்கின்ற காரணத்தால், எந்த அளவிற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளதோ, அந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு நாங்கள் செயல்படுவோம்," எனத் தெரிவித்தார். ஆனாலும் அடுத்தடுத்து நிகழும் அரசியல் பரபரப்புகளால் புதுச்சேரி அரசியல் களம் விறுவிறுப்படைந்துள்ளது.