புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் நாளை (26.08.2021) வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து பிற்பகலில் சட்டப்பேரவை துணை தலைவர் தேர்வும், மாலையில் நிதிநிலை அறிக்கை தாக்கலும் நடைபெற உள்ளன.
நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள முதலமைச்சர் ரங்கசாமி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். இதனையொட்டி முதலமைச்சர் ரங்கசாமி நேற்று புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது 15-ஆவது சட்டப்பேரவையின் முதல் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில் கலந்து கொள்ள வேண்டும் என துணைநிலை ஆளுநரிடம் முதலமைச்சர் அழைப்பு விடுத்தார்.
அதே சமயம் 2021 - 22 ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவு திட்ட வரையறை ரூ. 9,250 கோடிக்கு கோப்புகள் தயாரிக்கப்பட்டது. முதியோர் உதவித்தொகை அதிகரிப்பு, கூடுதல் பயனாளிகள் சேர்ப்பு, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நடவடிக்கைகளால் திட்டங்கள் அதிகரித்திருந்தது. திட்ட மதிப்பில் 10,500 கோடி பட்ஜெட் கேட்டு மத்திய அரசுக்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் மத்திய நிதித்துறையின் பரிசீலனையில் திட்ட வரையறை மொத்த மதிப்பீட்டில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. அதில் ரூபாய் 200 கோடி குறைக்கப்பட்டு 9,900 கோடி பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது. மாநில அரசின் திட்ட வரையறை ரூபாய் 10,500 கோடியாக முடிவு செய்யப்பட்டு மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அதனை அப்படியே ஏற்று அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக நிதித்துறை இந்த தொகையை ஏற்றுக் கொள்ளாமல் எப்போதும் போல ஆண்டுதோறும் 10 சதவீத தொகையை உயர்த்தி கொள்ளலாம் என்ற அடிப்படையில் கடந்த முறை அனுமதி வழங்கிய 9,000 கோடியில் இருந்து 10 சதவீதத்தை உயர்த்தி 9,900 கோடிக்கு அனுமதி வழங்கியது. கூடுதலாக அனுமதி கேட்ட ரூபாய் 200 கோடிக்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் முதலமைச்சர் ரங்கசாமி மத்திய அரசின் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், "புதுச்சேரியில் தமிழில் பதவியேற்றது எனக்கு மகிழ்ச்சி. அமைச்சர்களையும் தமிழில் பதவி ஏற்க வைத்தது இரட்டிப்பு மகிழ்ச்சி. வரலாற்றில் முதல்முறையாக புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளுநர் உரை தமிழில் இடம் பெறப் போகிறது என்பது இன்னும் கூடுதல் மகிழ்ச்சியை தருகிறது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
பட்ஜெட்டில் மாநில வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு அறிவிப்புகள் இடம்பெறும். புதுச்சேரி மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இருப்பதால் இங்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படும் என்றும், அதற்கு பக்கபலமாக இருப்போம் என்றும் சமீபத்தில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்தபோது தெரிவித்தார்கள்" என்றார்.