புதுச்சேரியை அடுத்துள்ள ஆரோவில்லில் உள்ள சீ.வி டேம் கம்யூனிட்டி என்ற பகுதியில் தென்கொரியாவை சேர்ந்த வாக்கர் ஜோரி- ஹைய் ஜோங் ஹீ தம்பதியினர் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். ஹைய் ஜோங் ஹீ (52) ஆரோவில்லில் பணியாற்றி வருகிறார்.
இவர்களுடைய வீட்டின் அருகே பிரான்ஸ் நாட்டை சேர்ந்த லூயிஸ் பால் மோர்லஸ் (71) என்பவர் தங்கியுள்ளார். இவர் கடந்த 24 ஆண்டுகளாக ஆரோவில்லில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 22- ஆம் தேதி இரவு வீட்டின் அருகே இசைக்கச்சேரி நடத்தியுள்ளார் மோர்லஸ். இரவு 10.00 மணி தாண்டியும் இசைக் கச்சேரி நடத்திய அவர் மிக அதிக சப்தத்துடன் கச்சேரி நடத்தி உள்ளார்.
அப்போது அருகாமை வீட்டிலிருந்த ஹைய் ஜோங் ஹீ தனது கணவர் வாக்கர் ஜோரியுடன் வெளியில் வந்து, 'ஏன் அதிக சப்தத்துடன் இசை கச்சேரி நடத்துகிறீர்கள்? எங்களால் தூங்க முடியவில்லை' என்று கேட்டுள்ளனர். அதற்கு மோர்லஸ், 'நான் இங்கு அதிக நாட்களாக இருப்பவன். எனவே உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது.
நீங்கள் வேண்டுமானால் வீட்டை காலி செய்து செல்லுங்கள். இல்லை என்றால் நான் உங்களை வெளியேற்றுவேன்' என்று கூறி மிரட்டியுள்ளார். இந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் கழித்து ஆரோவில் வெல் காபி என்ற இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஹைய் ஜோங் ஹீயை தகாத வார்த்தையில் திட்டி கைகளால் தாக்கியுள்ளார் மோர்லஸ்.
மேலும் அவரிடம் தவறான முறையில் நடந்து கொண்டுள்ளார். இதுகுறித்து ஹைய் ஆரோவில் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தியதன் பேரில் ஆரோவில் போலீசில் புகார் அளித்தார். அதையடுத்து கோட்டக்குப்பம் டி.எஸ்.பி அஜய்தங்கம், இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் ஆகியோர் விசாரணை நடத்தினர். மேலும் வழக்குப்பதிவு செய்து மோர்லஸை ஆரோவில் பகுதியில் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் டி.எஸ்.பி அஜய்தங்கம் கூறும்போது, "ஆரோவில் பகுதியில் இசைக்கச்சேரி, நடனம் உள்ளிட்டவைகள் நடத்த தடை விதிக்கப்ப்பட்டுள்ளது. மீறி நடத்தினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.