தமிழகத்தில் தி.மு.க.- காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு சுமுகமாக முடிந்துள்ள நிலையில் புதுச்சேரியில் காங்கிரஸ்- தி.மு.க. இடையேயான சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை இன்று (07/03/2021) தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தை வைசியாள் வீதியில் அமைந்துள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஏ.வி.எஸ்.சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் கந்தசாமி மற்றும் தி.மு.க. சார்பில் மாவட்டச் செயலாளர்கள் சிவா எம்.எல்.ஏ, எஸ்.பி.சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, "காங்கிரஸ்- தி.மு.க. முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. சில கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். இது தொடர்பாக கட்சித் தலைமைக்கு தெரிவித்து முடிவு செய்யப்படும். அடுத்தக் கட்டப் பேச்சுவார்த்தைக் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும். புதுச்சேரியில் மதசார்பற்றக் கூட்டணி மிகப் பலமாக இருக்கிறது. காங்கிரஸ், தி.மு.க., இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலைச் சந்திப்போம். புதுச்சேரியில் மத்திய பா.ஜ.க. அரசு அதிகாரத்தையும், பண பலத்தையும், அரசுத் துறைகளையும் ஏவி காங்கிரஸ் தலைமையிலான அரசைக் கவிழ்த்தது. என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணிப் பிரச்சினை அவர்களது விவகாரம். அதில் பதில் சொல்ல விரும்பவில்லை" என்றார்.