
சென்னையில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் கன்னத்தைக் கிள்ளி மதுபோதையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை மக்கள் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை அபிபுல்லா சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 24 வயது பெண் ஐ.டி ஊழியரை பின் தொடர்ந்து சென்ற மதுபோதை ஆசாமி ஒருவர் கன்னத்தை கிள்ளியும் பறக்கும் முத்தம் கொடுத்தும் அத்துமீறியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அந்த பெண் கத்தி கூச்சல் போட்டுள்ளார். அக்கம்பக்கத்தில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் இளைஞர்கள் சம்பந்தப்பட்ட நபரை பிடித்து சாலை ஓரத்தில் இருந்த கம்பத்தில் கட்டி வைத்துத் தாக்கினர்.
பின்னர் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த தேனாம்பேட்டை காவல்துறையினர் அந்த நபரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தி.நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட நபர் மீது ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் இருப்பதும் தெரியவந்துள்ளது. தற்பொழுது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.