நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை பரவல் தீவிரமடைந்திருக்கும் நிலையில், தமிழகத்திலும் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 28,978 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,52,389 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் 232 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 134 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 98 பேரும் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 15,880 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கரோனா பரவல் மற்றும் பாதிப்பில் மூன்றாம் இடத்தில் தமிழகம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கரோனா பாதிப்பில் நாட்டில் மூன்றாம் இடத்தில் தமிழகம் உள்ளதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை, தினசரி கரோனா பாதிப்பில் கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. கடந்த இரண்டு வாரங்களில் பெங்களூரு, சென்னை, எர்ணாகுளம், மலப்புரத்தில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 17 மாநிலங்களில் மட்டுமே 50 ஆயிரத்திற்கும் கீழ் கரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.