புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போனார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த 3 நாட்களாகத் தேடப்பட்டு வந்த சிறுமி ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்ட நிலையில் இன்று (05.03.2024) கண்டெடுக்கப்பட்டார்.
இதனையடுத்து சிறுமியின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி சடலமாக மீட்கப்பட்டதைக் கண்டித்து சிறுமியின் உறவினர்கள், ஊர்ப் பொதுமக்கள் என ஏராளமானோர் முத்தியால்பேட்டை அருகே உள்ள கிழக்கு கடற்கரைச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, “கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்” எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக மூன்று சிறுவர்கள் உட்பட ஒரு முதியவர் என 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் போராட்டம் நடைபெற்ற இடத்தில் பாதுகாப்புக்காக துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே சிறுமியின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் எனப் போலீசாரும், மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர். அதே சமயம் 4 தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். காணாமல் போன சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.