கேரளாவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும் ஆட்சியை கைப்பற்றின. அதனைத்தொடர்ந்து மீண்டும் பதவியேற்றுக்கொண்ட பினராயி விஜயன் தலைமையிலான அரசு, கரோனா பரவலுக்கு மத்தியிலும் சட்டப்பேரவை கூட்டத்தொடரை நடத்தி வருகிறது.
இந்தநிலையில் கேரளா சட்டப்பேரவையில் இன்று அம்மாநில நிதியமைச்சர் பாலகோபால் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் கரோனா முதல் அலையின்போது அறிவிக்கப்பட்டதுபோல், இரண்டாம் அலையிலும் 20 ஆயிரம் கோடிக்கான தொகுப்பை அறிவிக்கப்பட்டுள்ளது.
20 ஆயிரம் கோடிக்கான தொகுப்பில், சுகாதார அவசரநிலைகாக ரூ.2800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு நேரடியாக வழங்க நிதி வழங்க ரூ .8900 கோடியும் மற்றும் நிதி மறுமலர்ச்சியை நோக்கமாகக் கொண்டு பல்வேறு கடன்கள் மற்றும் மானியங்கள் வழங்க 8,300 கொடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த தொகுப்பினை தவிர 18-44 வயதானவர்களுக்கு தடுப்பூசி வாங்க 1000 கோடியும், அதனுடன் தொடர்புடைய உபகரணங்கள் வாங்க 500 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. கரோனா மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என கூறப்படும் நிலையில், அதை எதிர்கொள்ள தயாராகும் வகையில் இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியுள்ளது கேரளா. அதாவது மருத்துவக் கல்லூரிகளில் தொற்று நோய்க்கான சிறப்பு தனிமைப்படுத்தும் வளாகங்கள் அமைக்கவும், மருத்துவமனைகளில் 10 படுக்கைகள் கொண்ட தனிமைப்படுத்தும் வார்டுகள் அமைக்கவும் மற்றும் குழந்தைகளுக்கான ஐ.சி.யு அமைக்கவும் 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.