கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டு வரை வீட்டு வசதித்துறை அமைச்சராக ஐ. பெரியசாமி இருந்த போது 2008 ஆம் ஆண்டு தமிழக வீட்டு வசதி வாரிய வீட்டை ஒதுக்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் 2012 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் அமைச்சர் ஐ. பெரியசாமியை குற்றமற்றவர் என தீர்ப்பளித்திருந்தது.
இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு எதிரான வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். அப்போது அவர் கீழமை நீதிமன்றத்திற்கு பிறப்பித்த உத்தரவில் 3 மாத காலத்திற்குள் இந்த வழக்கை மீண்டும் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமைச்சர் ஐ. பெரியசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று (08.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் ஐ.பெரியசாமி சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டார். இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது கீழமை நீதிமன்றத்தில் விசாரணையைத் தொடரக் கூடாது. இந்த வழக்கில் அடுத்த விசாரணை வரும் வரை கீழமை நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்குத் தடை விதிக்கப்படுகிறது. 3 மாத காலத்திற்குள் இந்த வழக்கை மீண்டும் விசாரித்து முடிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு தடை விதிக்கப்படுகிறது எனத் தெரிவித்தார்.