மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநில கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்ட பிரியங்கா காந்தி தனது தேர்தல் பிரச்சாரத்தை கடந்த வாரம் குஜராத் மாநிலத்தில் தொடங்கினார். இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்ததாக தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ள பிரியங்கா, அதற்காக படகு பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன் ஒரு பகுதியாக வரும் 18 ஆம் தேதி பிரயாகராஜ் நகரின் சத்நாக் பகுதியிலிருந்து தொடங்கி 3 நாள் 140 கிலோமீட்டர் தூரம் படகில் பயணித்து அங்குள்ள கிராமங்களுக்கு சென்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
கங்கா-யாத்ரா என பெயரிடப்பட்டுள்ள இந்த பயணம் சத்நாக் பகுதியிலிருந்து தொடங்கி கங்கை ஆற்றின் வழியாக வாரணாசியின் அஸி காட் வரை செல்கிறார். அப்படி செல்லும் போது அங்குள்ள கிராமங்களில் தேர்தல் கூட்டங்கள் நடந்து உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.