வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட 13வது வார்டு ஆர்.எஸ்.நகர் பகுதியில் கூலி வேலை செய்யும் லட்சுமி என்பவரது மோதிரம் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு காணாமல் போனது. அதனைப் பல இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், இன்று நகராட்சி தூய்மை பணியாளர்கள் கழிவு நீர் கால்வாயை தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது லட்சுமி வீட்டின் அருகே கழிவுநீர் கால்வாய் தூர் வாரும் போது அதில் தங்க மோதிரம் இருப்பதைக் கண்ட தூய்மை பணியாளர்கள் இது குறித்து லட்சுமியிடம் கேட்டுள்ளனர். அவர் இது காணாமல் போன எனது தங்க மோதிரம் தான் எனத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற தலைவர் முன்னிலையில் கழிவுநீர் கால்வாயில் எடுக்கப்பட்ட தங்க மோதிரத்தை லட்சுமியிடம் நகர மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் ஒப்படைத்தார். மேலும் கால்வாயில் இருந்து எடுக்கப்பட்ட தங்க மோதிரத்தை எடுத்துக் கொடுத்த தூய்மை பணியாளர்கள் ஆனந்தன், தயாளன், ஆகிய இருவருக்கும் நகர மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் பட்டு வேட்டி அணிவித்துப் பாராட்டு தெரிவித்துப் பெருமைப்படுத்தினார்.
இதனையடுத்து தூய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துத் தங்க மோதிரத்தைக் கூலித் தொழிலாளி லட்சுமி பெற்றுச் சென்றார்.