கர்நாடகா மாநிலம், பெங்களூர் நகரத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தான் ஒரே வழி என கர்நாடகா மாநில அரசு முடிவு செய்து, அணை கட்டுமான பணிகளுக்கு ஆர்வம் காட்டி வந்தது. குறிப்பாக, சமீபத்தில் நடைபெற்ற கர்நாடகா மாநில பட்ஜெட் கூட்டத்தொடரில், மேகதாது அணை கட்டப்படும் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்தார். இதற்கு தமிழ்நாட்டில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த சூழலில், கடந்த மார்ச் 21ஆம் தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழுவின் கூட்டத்தில் பெங்களூர் நகர குடிநீர் தேவைக்காக காவிரியில் இருந்து கூடுதல் தண்ணீரை திறக்க வேண்டும் என்று கர்நாடகா மாநில அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால், அதற்கு தமிழக அரசு அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே, தமிழ்நாட்டுக்கு பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்காக தலா 2.8 டி.எம்.சி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகா அரசை காவிரி ஒழுங்காற்று குழு கேட்டுக்கொண்டது.
இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29வது கூட்டம் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இன்று (04-04-24) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம் மற்றும் கர்நாடகா தரப்பு அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில், பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நிலுவையில் உள்ள 3.5 டி.எம்.சி தண்ணீரையும், ஏப்ரல், மே மாதங்களுக்கான தண்ணீரையும் தடையின்றி திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு, கர்நாடகாவில் குடிநீர் பிரச்சனை மற்றும் வறட்சி நீடித்து வருவதால் தமிழ்நாட்டிற்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட முடியாது. மேலும், நீர் இருப்பு மற்றும் சூழலை கருத்தில் கொண்டு மட்டுமே தண்ணீர் திறக்க முடியும் என கர்நாடகா தரப்பு அரசு அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.