நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் மக்கள் மத்தியிலும், ரயில்வே துறையினர் மத்தியிலும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கரில் இருந்து ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு நிலக்கரி ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதன்படி இந்த சரக்கு ரயில் கொத்தவலசா - கிரந்துல் என்ற பகுதிகளுக்கு இடையே சென்றது. அப்போது ரயிலின் பல வேகன்களில் தீ பற்றி எறியத் தொடங்கியுள்ளது. அதாவது ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டத்தில் உள்ள மச்சகுந்தா சாலை என்ற ரயில் நிலையம் அருகே இந்த தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதே சமயம் சரக்கு ரயில் வேகன்களில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது இந்த தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ரயில்வே ஊழியர்கள் விரைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகளும், காவல்துறையினரும் ஆய்வு செய்து விசாரணை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.