இங்கிலாந்தின் நியூபோர்ட் பகுதியைச் சேர்ந்தவர் கேம்ஸ் ஹோவல்ஸ். இவர் கடந்த 2009ஆம் ஆண்டின் போது 8,000 பிட்காயின்களை வாங்கியுள்ளார். தான் வாங்கிய பிட்காயின்களை சில ஆண்டுகளானதும் அதை மறந்துவிட்டார். இந்த சூழ்நிலையில், இவரது காதலி ஹல்பினா எட்டி இவான்ஸ் வீட்டை சுத்தப்படுத்தும்போது பிட்காயின்கள் வாங்கிய டிஜிட்டர் கீ விவரங்கள் அடங்கிய ஹார்ட் டிரைவ்வை தவறுதலாக குப்பை தொட்டியில் போட்டுவிட்டார். இதற்கிடையில், ஏதோ ஒரு காரணத்திற்காக அவர்களுக்குள் காதல் முறிவு ஏற்பட்டுள்ளது.
பிட்காயின் விலை தற்போது லட்சகணக்கில் அதிகரித்து வந்த போது தான், தன்னிடமும் பிட்காயின்கள் இருக்கிறது என்பதை ஹோவல்ஸ் உணர்ந்துள்ளார். அவர் வாங்கிய பிட்காயின்களின் தற்போதைய மதிப்பு 569 மில்லியன் பவுண்ட் (இந்திய மதிப்பில் ரூ.5,900 கோடி) என்பதை அறிந்த ஹோவல்ஸ், பிட்காயின் விவரங்கள் அடங்கிய ஹார்ட் டிரைவ்வை வீடு முழுக்க தேடி பார்த்தும் எங்கும் கிடைக்காததால் தனது முன்னாள் காதலியிடம் கேட்டுள்ளார். அவர் நடந்தவற்றை எடுத்துக் கூற, ஹோவல்ஸ் வாங்கிய பிட்காயின் தகவல் தொகுப்பு அடங்கிய ஹார்ட் டிரைவ் நியூபோர்ட் குப்பைக்கிடங்கில் ஒரு லட்சம் டன் கழிவுகளுக்கு கீழ் புதைந்திருக்கிறது என்பதை அவர் அறிந்துள்ளார்.
இதில் விரக்தியடைந்த ஹோவல்ஸ், பிட்காயின்களை எடுப்பதற்காக நியூபோர்ட் குப்பைக்கிடங்கை தோண்ட வேண்டும் என்று தற்போது வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். இந்த சட்டப்போராட்டத்தின் மூலம் ஹார்ட் டிரைவ் திரும்ப கிடைக்கும் பட்சத்தில் நியூபோர்ட் நகர மேம்பாட்டுக்கு 10 சதவீத தொகையை தானமாக அளிப்பதாக ஹோவல்ஸ் உறுதியளித்துள்ளார்.