கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் தனியார் ஐடிஐ மாணவர்கள் சங்கராபுரத்தில் பணம் வைத்து இருசக்கர வாகன விலிங் ரேஸ் பந்தயம் நடத்தியுள்ளனர். அப்போது, தனியார் ஐடிஐ மாணவர்களிடையே ஒருவருக்கு ஒருவர் முந்தி செல்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தனியார் ஐடிஐ மாணவர்கள் முன்விரோதத்தோடு பேருந்து நிலையத்தில் இரண்டு குழுக்களாகப் பிரிந்து வந்துள்ளனர். அப்போது பேருந்து நிலையத்தில் தனியார் மருத்துவமனை அருகே இரண்டு குழுக்களும் தனித்தனியாகப் பிரிந்து ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இந்த மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தாக்குதலில் தனியார் ஐடிஐ மாணவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சங்கராபுரம் பகுதியில் அரசுப் பள்ளி மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிகொண்ட நிலையில் தற்போது, ஐடிஐ மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை என்று குற்றம் சாடிய மக்கள் சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் பல ஆண்டுகளாக புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தும் இதுவரை காவல்துறையின் சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறுகின்றனர்.
இதனிடையே சங்கராபுரம் பகுதியில் அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆங்காங்கே மோதிக்கொள்ளும் கொண்டு சம்பவம் பெற்றோர்கள், பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் காவல்துறையினர் மாதாந்திர கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கையை வைத்து வருகின்றனர்.