மணிப்பூரில் உள்ள ஜிரிபாம் பகுதியில் சி.ஆர்.பி.எஃப். பாதுகாப்பு படையினருக்கும், குக்கியினத்தைச் சேர்ந்த ஆயுதக்குழுவினருக்கும் இடையே கடந்த 11ஆம் தேதி மோதல் சம்பவம் நடைபெற்றது. ஆயுதக் குழுவினர் இரு திசைகளில் இருந்து காவல் நிலையத்தில் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியபோது இந்த மோதம் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த என்கவுண்டரில் 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் எனத் தகவல்கள் வெளியானது. குக்கி ஆயுத குழுவினருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து, நிவாரண முகாமில் இருந்த மெய்தி சமூகத்தைச் சேர்ந்த 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகளை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றதாக தகவல் வெளியானது . ஜிரிபாம் மாவட்டத்தில் நடந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து, 13 பேர் காணாமல் போனதாக தகவல் வெளியானதை அடுத்து, 5 பேரை உயிரோடும், 2 ஆண்களின் உடல்கள் எரிக்கப்பட்ட நிலையிலும் போலீசார் கண்டுபிடித்தனர். மீதமுள்ள மெய்தி இனத்தை சேர்ந்த 60, 31, 25 ஆகிய வயதுடைய 3 பெண்கள், 3 குழந்தைகள் என மொத்தம் 6 பேரை பிடிக்க, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி வந்தனர்.
இதையடுத்து, மாயமான 6 பேரும் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டனர். இதனால், மாநிலத்தில் மீண்டும் பதற்றம் நிலவியது. இதனை தொடர்ந்து, மெய்தி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், மாநில அமைச்சர்கள் மற்றும் பேரவை உறுப்பினர்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி தீ வைத்து எரித்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டதையடுத்து அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும், வன்முறை பரவுவதை தடுக்கு இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மெய்தி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மாயமானது அங்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெய்தி சமுகத்தைச் சேர்ந்த லைஷ்ராம் கமல்பாபு சிங் (55), குகி சமூகம் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளால் சூழப்பட்ட காங்போங்பியில் உள்ள லீமாகோங் ராணுவ முகாமில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 25ஆம் தேதி பணிக்கு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் ஸ்விட்ஸ் ஆஃப் செய்யப்பட்டுள்ளதால் அவரது குடும்பத்தினர் பதற்றமடைந்து புகார் அளித்துள்ளனர். அதன் பேரில், காவல்துறையினரும், ராணுவத்தினரும் இணைந்து மாயமான லைஷ்ராம் கமல்பாபு சிங்கை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், ஆளில்லா விமானங்கள், மோப்ப நாய்களுடன் மாயமான நபரை தேடும் பணியில் ராணுவம் ஈடுபட்டு வருகின்றது. தொடர்ந்து, அடுத்தடுத்த நபர்கள் மாயமாகி கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்படும் சம்பவங்களால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே கடந்த ஆண்டு ஏற்பட்ட மோதல், ஆளும் பா.ஜ.க அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடித்தது. இதனால் மணிப்பூர் மாநிலமே கலவர பூமியாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.