உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நான்கு நபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் உத்தரப்பிரதேச அரசை பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் கடந்த 14 ஆம் தேதி நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். நாக்கு வெட்டப்பட்டு, முதுகெலும்பு முறிந்த நிலையில் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்த அந்த பெண், டெல்லி ஜவஹர்லால் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் சிறப்பு சிகிச்சைக்காக அங்கிருந்து டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அந்த பெண் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு, கொலைச்சம்பவத்தில் ஈடுபடல் மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி, "கொடூர நடத்தையினால் தலித் பெண் சப்தர்ஜங் மருத்துவமனையில் இறந்து போய்விட்டார். 2 வாரங்களாக இந்த பெண் வாழ்வுக்கும், சாவுக்கும் இடையே போராடி வந்தார். ஹத்ராஸ், ஷாஜஹான்பூர், கோரக்பூர் என்று மாறி மாறி பாலியல் வன்கொடுமைகள் மாநிலத்தை உலுக்கி வருகின்றன. உ.பி.யில் சட்டம் ஒழுங்கு கடுமையாக மோசமடைந்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்புக்கான உத்தரவாதத்தின் சுவடு கூட இந்த மாநிலத்தில் இல்லை. குற்றவாளிகள் வெளிப்படையாகவே குற்றங்களைச் செய்து வருகின்றனர். இந்த படுபாதகத்தை செய்தவர்கள் தண்டனை பெற்றாக வேண்டும். யோகி ஆதித்யநாத் அவர்களே நீங்கள்தான் பெண்களின் பாதுகாப்புக்கு பொறுப்பு" எனத் தெரிவித்துள்ளார்.