மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா எனும் சமூகத்தினர் பெரும்பாலானோர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். அதனை ஏற்று கடந்த 2018 ஆம் ஆண்டு, மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 16 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்குவதாக அப்போது ஆட்சியில் இருந்த பா.ஜ.க அரசு அறிவித்தது. ஆனால், மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம், மாநில அரசு வழங்கிய இட ஒதுக்கீடு உத்தரவை ரத்து செய்து தடை விதித்தது.
இதனைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் மராத்தா சமூகத்தினர் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரி தொடர் போராட்டத்தை நடத்தி வந்தனர். இதனிடையே, மராத்தா சமூகத்தின் செயல்பாட்டாளர் மனோஜ் ஜராங்கே, இட ஒதுக்கீடு கோரிக்கையை வைத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.
அப்போது, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மனோஜ் ஜராங்கேவை சந்தித்து இட ஒதுக்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதிமொழி அளித்தார். அதனை ஏற்று மனோஜ் ஜராங்கே தனது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார். ஆனால், அப்போது இட ஒதுக்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று கூறப்பட்டது. அதனால், மனோஜ் ஜராங்கே மீண்டும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய போது மராத்தா சமூகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டு, ரோட்டில் டயர்களை தீ வைத்து எரித்தனர். மேலும், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரகாஷ் சோலங்கியின் வீடு மற்றும் வாகனங்களுக்குத் தீ வைத்து எரித்தனர். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதனையடுத்து, மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையில், தனிப் பிரிவின் கீழ் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா கடந்த 20ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு பிரிவின் கீழ் மராத்தா சமூகத்துக்கான இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட வேண்டும் என்றும், மராத்தா சமூகத்தினர் குன்பி சாதியை சேர்ந்தவர்கள் என்ற அறிவிப்பை சட்டமாக இயற்றி நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்றும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனோஜ் ஜாரங்கே மற்றும் ஆதரவாளர்கள் ஜல்னா மாவட்டம், அந்தர்வாலி சாரதி கிராமத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று (26-02-24) காலை, ஜல்னா மாவட்டத்தில் உள்ள தீர்த்தபுரி நகரின் சத்ரபதி சிவாஜி மஹராஜ் சவுக்கில் போராட்டக் குழுவினர், அங்கு நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது தீ வைத்து எரித்துள்ளனர். மேலும், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, சகால் மராத்தா சமாஜ் அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து, மனோஜ் ஜாரங்கே போராட்டத்துக்கு ஆதரவாளர்கள் கூடுவதை தவிர்க்க ஜல்னா, சத்ரபதி, சம்பாஜி நகர், பீட் ஆகிய மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் அம்பாட் தாலுகாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.