![Prevention of Torture Act against Kerala BJP leader!](http://image.nakkheeran.in/cdn/farfuture/3T_j7SfigzetqN9jmbACCuKc4XTfQJD4PYshaBMdjGo/1654692279/sites/default/files/inline-images/th_2514.jpg)
கேரளா பாஜக தலைவரான சுரேந்திரன், அங்கு நடந்த கடந்த சட்டமன்ற தோ்தலில் கோணி மற்றும் மஞ்சேஸ்வரம் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதில் காசா்கோடு மாவட்டம் கா்நாடக எல்லையை ஓட்டிய மஞ்சேஸ்வரம் தொகுதியில் 2016-ல் போட்டியிட்ட சுரேந்தின், 86 ஓட்டில் தான் தோல்வியை தழுவினார். இதற்கு அந்த தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்ட சுந்தரா தான் காரணம் என்றும் இருவருடைய பெயரும் ஒத்து இருப்பதால் தான் ஓட்டு மாறி போனது என பாஜக ஆதரவாளர்கள் மத்தியில் பேச்சு இருந்தது.
இந்த நிலையில் கடந்த தோ்தலிலும் அங்கு பகுஜன் சமாஜ் பார்ட்டி சார்ப்பில் சுந்தரா வேட்புமனு தாக்கல் செய்தார். எனவே சுந்தராவை வாபஸ் பெற வைக்க அவருக்கு 2.50 லட்சமும் விலையுயா்ந்த செல்போன் ஒன்றும், கா்நாடகாவில் மது கடை நடத்த லைசன்ஸ் வாங்கி தருவதாகும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுந்தராவின் வேட்புமனுவை வாபஸ் பெற வைத்தார் சுரேந்திரன்.
இந்த சம்பவத்தை சுரேந்திரா க்ரைம் பிராஞ்ச் போலீசாரிடம் கூறினார். இதையடுத்து போலீசார், சுரேந்திரன் உட்பட 6 போ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது, பழங்குடியினர் செயற்பாட்டாளா் சி.கே ஜானு தலைமையிலான ஜனநாயக ராஷ்டிரியா கட்சியை பாஜக கூட்டணியில் சோ்க்க 10 லட்சமும் ஸ்விப்ட் காரும் தருவதாக சுரேந்திரன் ஜானுவிடம் பேசிய ஆடியோவை ஜானு வெளியிட்டார்.
இந்த ஆடியோவையும் கைப்பற்றிய க்ரைம் பிராஞ்ச் போலீசார் அது சம்மந்தமாகவும் விசாரணை நடத்தி சுந்தரா வழக்குடன் போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்தனா். இதனால் ஆத்திரமடைந்த சுரேந்திரன் ஜானு மற்றும் சுந்தராவை அவர்களின் சமுகத்தை குறிப்பிட்டு ஒருமையில் பேசியுள்ளார். அந்த ஆதாரங்களையும் போலீசார் சேகரித்து சுரேந்திரன் மீது வன் கொடுமை தடுப்பில் ஜாமீன் இல்லா பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனா். அதனை இடைக்கால அறிக்கை மூலம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனா். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.