அவிநாசி ஆறு வழி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மற்றும் கண்டெய்னர் லாரி மோதிக்கொண்ட விபத்தில் 20 பேர் பலியான நிலையில், இந்த விபத்திற்கு பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஆறு வழி தேசிய நெடுஞ்சாலையில் சேலத்திலிருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த கேரள அரசு சொகுசு பேருந்தும், டைல்ஸ் லோடு ஏற்றி சென்ற லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் பேருந்தில் பயணித்த 6 பெண்கள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 20 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதற்கு வருத்தம் தெரிவித்து பிரதமர் மோடி பதிவிட்டுள்ள ட்வீட்டில், "தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் நடந்த பேருந்து விபத்து மிகுந்த மனவேதனை அளிக்கிறது. இந்த துயரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக பிரார்த்திக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.