Skip to main content

குடியரசுத் தலைவர் தேர்தல்;வாக்கு கணக்கிடும் முறை! 

Published on 10/06/2022 | Edited on 10/06/2022

 

Presidential Election: Counting of Votes!

 

இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் குடியரசுத் தலைவர் தேர்தல் விகிதாச்சார வாக்களிப்பு முறைக் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு வாக்கின் மதிப்பும், அந்தந்த மாநில மக்கள் தொகைக்கு ஏற்ப மாறுபடும். இது குறித்த கூடுதல் தகவல்களை விரிவாகப் பார்ப்போம். 

 

இந்தியாவின் குடியரசுத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இவர்கள் வாக்காளர் குழுமம் என்று அழைக்கப்படுகின்றனர். தேர்தலில், மாநில சட்டமேலவை உறுப்பினர்கள், நியமன உறுப்பினர்கள், நாடாளுமன்ற நியமன உறுப்பினர்களுக்கு வாக்குரிமை கிடையாது. 

 

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் 776 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 4,033 சட்டமன்ற உறுப்பினர்கள் என 4,809 பேர் வாக்களிக்கவுள்ளனர். தேர்தலில் விகிதச்சார வாக்களிப்பு முறை பின்பற்றப்படுகிறது. அதன்படி, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு 1-ஐ விட அதிகமானது. 

 

ஒவ்வொரு வாக்கின் மதிப்பும் அந்தந்த மாநில மக்கள் தொகையைப் பொறுத்து வேறுபடுகிறது. வாக்கு மதிப்பைக் கணக்கிட ஒரு சூத்திரம் உள்ளது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரது வாக்கின் நிலையான மதிப்பு 708 ஆகும்; இது மாறாது. அதேசமயம், மாநிலத்தில் உள்ள மக்கள் தொகைக்கேற்ப சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்கு மதிப்பு மாறுகிறது. மாநிலத்தின் மக்கள் தொகையை அதன் சட்டமன்றத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையால் வகுத்து, பின்னர் அதனை ஆயிரத்தால் வகுத்தால் கிடைக்கும் மதிப்பே வாக்கின் மதிப்பாகக் கணக்கிடப்படும். 

 

அந்த வகையில், அதிக மக்கள் தொகை உள்ள உத்தரப்பிரதேசம் மாநிலம் அதிக மக்களைக் கொண்டிருப்பதால், தனிநபரின் வாக்கின் மதிப்பு 708 ஆக உள்ளது. தமிழ்நாட்டில் ஒரு சட்டமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு 176 ஆகும்; அந்த வகையில் மாநிலத்தில் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த வாக்கு 41,184 ஆகும். வரவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் நாடு முழுவதும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்கு மதிப்பு 5,43,231 ஆகும். நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்கு மதிப்பு 5,43,200 ஆகும். குடியரசுத் தலைவர் தேர்தலில் மொத்த வாக்குகளின் மதிப்பு 10,86,431 ஆகும். 

 

சார்ந்த செய்திகள்