
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் எரிசக்தி உற்பத்தியை அதிகரிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.
கச்சா எண்ணெய் விலை தற்போது பீப்பாய்க்கு 85 டாலராக உள்ளதன் விளைவாக, இந்தியாவில், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் புதிய உச்சத்தைத் தொட்டு உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளையும் எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்தியாவில் எரிசக்தி உற்பத்தியை அதிகரிப்பது குறித்து, அத்துறையைச் சேர்ந்த சர்வதேச நிறுவனங்களின் தலைவர்கள், தலைமை அதிகாரிகள், அத்துறை நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை (20/10/2021) ஆலோசனை நடத்த உள்ளார்.
இது தவிர, கச்சா எண்ணெய் விலையைக் குறைப்பது குறித்து எண்ணெய் வள நாடுகளுடன் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பேசி வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். கச்சா எண்ணெய் விலை உயர்வு பல்வேறு நாடுகளில் பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தி, அதன் தாக்கம் எண்ணெய் வள நாடுகள் மீதும் பிரதிபலிக்கும் எனக் கூறி இந்தியா பேரம் பேசி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீதான வரி மிக அதிகளவில் இருப்பது தான், அவற்றின் விலை 100 ரூபாய்க்கு மேல் இருப்பதற்குக் காரணம் என்றும், எனவே, வரிகளைக் குறைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு நெருக்கடிகள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.