'2ஜி' மேல்முறையீட்டு வழக்கில், தொடர் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 2 ஜி அலைக்கற்றை வழக்கில் தி.மு.க.வின் முன்னாள் மத்திய அமைச்சர் அ.ராசா, திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்டவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் 2018-ல் மேல் முறையீடு செய்திருந்தன. சி.பி.ஐ. தரப்பின் வாதங்கள் ஏற்கனவே முடிந்துள்ள நிலையில், இந்த மேல்முறையீட்டு வழக்கு நீண்ட மாதங்களாகக் கிடப்பிலிருந்தது.
இந்நிலையில், 2ஜி மேல்முறையீட்டு வழக்கில் தொடர் விசாரணை மேற்கொண்டு வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் எனக் கூடுதல் சொலிசிட்டர் சஞ்சய் ஜெயின் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், "இந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்து வரும் நீதிபதி சேத்தி நவம்பர் மாதம் ஓய்வு பெறவிருக்கிறார். அதனால் வழக்கை விரைந்து முடிக்க வேண்டும். அதற்கேற்ப, வழக்கில் சம்மந்தப்பட்ட அனைவரின் வாதங்களையும் செப்டம்பருக்குள் முடிக்க வேண்டும்" எனக் கோரியிருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், 2ஜி வழக்கை விரைவாக விசாரிக்க ஒப்புக்கொண்டதோடு, வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தொடர் விசாரணை நடைபெறும் என அறிவித்துள்ளது.