மேற்கு வங்கத்தில் பராமரிப்பு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து நடந்துள்ள சம்பவம் குறித்து ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் பாங்குரா என்ற பகுதியில் இன்று அதிகாலை 4 மணிக்கு 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. ரயில் ஓட்டுநர் ஒருவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் உயிர்ச் சேதம் ஏதும் இல்லை என்று முதல்கட்ட தகவல்கள் வந்தன. தண்டவாளத்தில் இருந்து 8 ரயில் பெட்டிகள் தடம் புரண்டது. மீட்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் கரக்பூர் - பாங்குரா- ஆத்ரா - ரயில் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழித்தடத்தில் தற்போது. 14 ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 3 ரயில்கள் மாற்றுப் பாதைக்கு திருப்பி விடப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. மீட்புப் பணிகள் முடிவடைந்த நிலையில் மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சரக்கு ரயில் விபத்து குறித்து தென்கிழக்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கையில், “மேற்கு வங்க மாநிலம் ஒண்டாகிராம் ரயில் நிலையத்தில் சிவப்பு சிக்னலை மீறி நிற்காமல் சென்றதால் சரக்கு ரயில், பராமரிப்பு ரயில் மீது மோதி தடம் புரண்டது. பராமரிப்பு ரயிலை தடம் மாற்றும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் சரக்கு ரயில் மோதியதில் 8 ரயில் பெட்டிகள் தடம் புரண்டன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.