டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசாடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் கடந்த 10ஆம் தேதி அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து, அவர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (24-05-24) பேட்டி அளித்தார். அப்போது அவர், “என்னுடைய பதவியை நான் ராஜினாமா செய்து சிறைக்குச் செல்ல வேண்டும் என்பதை நரேந்திர மோடி விரும்புகிறார். தேர்தலில் கெஜ்ரிவாலைத் தோற்கடிக்க முடியாது என்பது அவருக்குத் தெரியும். அதனால் தான் இந்த திட்டத்தை வகுத்துள்ளார். கெஜ்ரிவாலைக் கைது செய்தால், அவரது அரசு கவிழும், அதன் பிறகு தேர்தல் நடத்தி பா.ஜ.க வெற்றி பெறும். இன்று நான் பதவி விலகினால் அவர்களின் அடுத்த இலக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரளாவின் பினராயி விஜயன், தமிழகத்தின் மு.க.ஸ்டாலின். இன்று நான் பதவி விலகினால் நாட்டின் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்.
நான் வருமான வரி மேலாளர் வேலையை விட்டுவிட்டு டெல்லிக்கு வேலை செய்தேன். நான் டெல்லி முதல்வர் பதவியை 49 நாட்களில் ராஜினாமா செய்தேன். ஆனால், இது எனது போராட்டத்தின் ஒரு பகுதி என்பதால் இன்று நான் பதவி விலகவில்லை. முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன். நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர்கள் ஒரு பொதுநல மனுவையும் தாக்கல் செய்தனர். ஆனால் அவரை (கெஜ்ரிவால்) ராஜினாமா செய்ய வற்புறுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
சிறையிலிருந்து நான் முதலமைச்சராகத் தொடர விரும்பினால் என்னால் முடியும் என்று நீதிமன்றம் கூறியது. எனவே, நான் முதலமைச்சராக இருந்தால், என் கடமையைச் செய்ய, சிறைக்குள் அடிப்படை வசதிகளை நீதிமன்றம் செய்து கொடுக்க வேண்டும். பா.ஜ.க எங்குத் தேர்தலில் தோற்றாலும், பிரதமர் மோடி முதல்வர்களையும், எதிர்க்கட்சித் தலைவர்களையும் கைது செய்வார். ஆனால், நான் ராஜினாமா செய்துவிட்டு, சிறையிலிருந்து ஆட்சியை நடத்தவில்லை என்றால், பிரதமர் மோடி மற்ற முதல்வர்களைத் தொடத் துணிய மாட்டார்” எனத் தெரிவித்தார்.