உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற பகுதியில் கடந்த 2ஆம் தேதி ஆன்மிகக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா உரையாற்றியப் பேச்சைக் கேட்க ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதற்காகக் கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் நிகழ்ச்சி முடிந்த பின் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலரும் மயங்கி விழுந்தனர். இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் என 121 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்தச் சம்பவத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து சாமியார் போலே பாபா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள காஸ்கஞ்ச் என்ற இடத்தில் சாமியார் போலே பாபா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “ஜூலை 2 ஆம் தேதி நடந்த சம்பவத்திலிருந்து தான் மன அழுத்தத்தில் இருக்கிறேன். மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். ஆனால், உலகுக்கு வந்த ஒவ்வொருவரும் ஒரு நாள் போக வேண்டும். விதியில் எழுதப்பட்டதை யாராலும் தடுக்க முடியாது.
அதே நேரம், சம்பவம் நடந்த போது கூட்டத்தில் சில விஷமிகள் புகுந்து விஷவாயுவை பரப்பியதை நேரில் சிலர் பார்த்திருக்கிறார்கள். சனாதன மற்றும் சத்தியத்தின் அடிப்படையில் இயங்கும் எனது அமைப்பை சிலர் அவதூறு செய்ய முயற்சிக்கின்றனர். நீதித்துறை ஆணையத்தின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. எங்களது அனைத்து ஆதரவாளர்களும் முடிந்த அனைத்தையும் செய்து சதிகாரர்களை அம்பலப்படுத்துவார்கள் என்று முழு நம்பிக்கை வைத்துள்ளோம்” என்று கூறினார். இந்த வழக்கில், சாமியார் போலே பாபா பெயர் இணைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.