இந்தியாவில் கரோனா தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்திய அரசு மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள மருந்து நிறுவனங்களும் இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
அந்தவகையில், இந்திய மருந்து நிறுவனமான சிப்லா, கரோனா தடுப்பூசிக்காக மாடர்னா தடுப்பூசி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யவுள்ளதாகவும், இதற்காக சிப்லா முன்பணமாக 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை மாடர்னா நிறுவனத்துக்கு வழங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும், இறக்குமதி செய்யப்படும் மாடர்னா தடுப்பூசிகளுக்கு விலைக் குறைப்பு, உள்நாட்டுச் சோதனைகள், அடிப்படை சுங்க வரி ஆகியவற்றிலிருந்து விலக்கு கேட்டும், நஷ்ட ஈடு தொடர்பான நடைமுறைகள் குறித்தும் சிப்லா நிறுவனம் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அத்தகவல்கள் தெரிவித்தன.
இந்நிலையில், மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, இந்த தகவலை வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இது சிறப்பான செய்தி. சிப்லா மற்றும் மாடர்னாவுக்கு தேவையான விலக்குகளை அரசாங்கம் விரைவாக வழங்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். உலகில் தயாரிக்கப்பட்ட பலவிதமான தடுப்பூசிகளை அதிகமாக விநியோகம் செய்வதும், சிப்லா போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களுமே மூன்றாவது அலை மட்டுமல்லாமல் வருங்கால கரோனா அலைகளிலிருந்தும் நமக்கான ஒரே உண்மையான பாதுகாப்பாகும்" எனத் தெரிவித்துள்ளார்.